நல்லூர்பாளையம் கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் உள்ள
வறண்ட, வானம் பார்த்த பூமி. விவசாயம் பொய்த்துப் போன
சூழ்நிலையில், விவசாய நிலங்களில் எல்லாம் காற்றாலைகள்தான்
சுழன்று கொண்டிருக்கின்றன. கிராமத்தின் பெரும்பாலான இளைஞர்கள், வேலைக்காக தொழில் நகரமான திருப்பூரைத்தான்
நம்பியிருக்கிறார்கள்.
இந்நிலையில், பொட்டல் காடாக உள்ள கிராமத்தை, பசுமை பூமியாக மாற்ற நினைத்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து 'பசுமைநல்லூர் அமைப்பு’ என்றொரு இயக்கத்தை உருவாக்கி
செயல்பட ஆரம்பித்துள்ளனர். இதன் சார்பில்... மரம் நடுதல்; ரத்ததான முகாம்; 'முல்லை-பெரியாறு பிரச்னையும்
தீர்வும்’ நூல் அறிமுகம் என மூன்று நிகழ்வுகளை சமீபத்தில்
நடத்தினர்.
இதுபற்றி
நம்மிடம் பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், ''பரம்பரையாக விவசாயம் செய்து, தமிழக விவசாயச் சங்கங்களின் செயல்பாடுகளிலும் தங்களை
முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட விவசாயிகளைக் கொண்டதுதான் எங்கள் கிராமம். ஆனால், இன்று குலத்தொழிலைச் செய்ய முடியாமல், கைத்தறியில் சேலை நெசவு செய்தும், தொழிற்சாலைகளில் வேலை செய்தும் பிழைக்கிறோம். காரணம்...
தாங்க முடியாத வறட்சிக்கு எங்கள் பூமி இலக்கானதுதான்!
நிலங்களையெல்லாம்
காற்றாலை மின்சார நிறுவனங்களிடம் விற்றுவிட்டு, சொற்ப நிலங்களை மட்டும்
பெயருக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். பிழைப்புக்காக நெசவுத் தொழிலில்
இறங்கிவிட்டன, பல குடும்பங்கள். திருப்பூரிலும் வேலை தேடி தஞ்சம்
புகுந்துள்ளனர் பலரும்.
இந்தச்
சூழ்நிலையிலும், விவசாயம் மீதான எங்களின் ஆர்வம் மட்டும் இதுவரை
குறையவே இல்லை. சொல்லப் போனால், 'பசுமை விகடன்' வருகைக்குப் பிறகு, அது அதிகரித்துக் கொண்டே
இருக்கிறது. மொத்தம் உள்ள 500 குடும்பங்களில், 30 குடும்பத்தினர்... முதல் இதழில் இருந்து பசுமை
விகடனை வாசித்து வருகிறோம். அவர்களில் நானும் ஒருவன்.
பசுமை
விகடன் தந்த விழிப்பு உணர்வுதான்... எங்கள் அமைப்பு தோன்றியதற்கான காரணம்.
இருக்கும் மரங்களைக் காப்பாற்றுவது, புதிய மரங்களை நட்டு, பராமரிப்பது... என்ற குறிக்கோள்களைக் கொண்டு எங்கள்
பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இப்போது அமைப்பில் 50 இளைஞர்கள்இணைந்திருக்கிறோம்'' என்று சொன்னார்.
இந்த
இளைஞர்கள், ஏற்கெனவே உள்ள மரங்களுக்கும், புதிதாக வைக்கும் மரங்களுக்கும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்ப
முறையில், ஜீவாமிர்தம் தயாரித்து ஊட்டம் கொடுத்து வருவது
குறிப்பிடத்தக்கது!
தொடர்ந்து
பேசிய அமைப்பாளர் கார்த்திகேயன், ''எங்கள் கிராமத்தில் இருந்து
ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் பரம்பிக்குளம்-ஆழியாறு பிரதான வாய்க்கால் ஓடுகிறது.
அதிலிருந்து ஒரு சிறு கால்வாய் வெட்டி, எங்கள் ஊர் குளத்தில்
இணைத்து விட்டால்... 5 மணி நேரத்தில் குளம்
நிறைந்து விடும். எங்கள் பஞ்சமும் தீர்ந்து விடும். ஆண்டுக்கு 9 மாதங்கள் தண்ணீர் போகும் அந்தக் கால்வாயிலிருந்து ஆண்டுக்கு
ஒரு தடவை, 5 மணி நேரம் மட்டும் தண்ணீர் விட்டாலே எங்கள்
பஞ்சம் தீர்ந்து விடும். எங்கள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களே, மக்கள் பங்களிப்புடன் அதற்கான வேலையைச் செய்ய
திட்டமிட்டுள்ளோம். இதற்காக அரசாங்கத்தின் அனுமதி நிச்சயமாகக் கிடைக்கும் என்றும்
நம்புகிறோம்'' என்று சொன்னார்.
ஊரே
காய்ந்துபோனதால், நிலத்தையெல்லாம் காற்றாலை
மின்சார நிறுவனங்களுக்கு விற்றவர்கள், தற்போது மிச்சம் மீதி
இருக்கும் நிலத்தை வைத்து, மீண்டும் பசுமையை உருவாக்க
தீர்மானித்துள்ளனர். அதற்கான கனவுதான் 'பசுமைநல்லூர் அமைப்பு'!
''ஊரின் பெயரையே பசுமைநல்லூர் என்று
மாற்றுவதுதான் எங்களுடைய குறிக்கோள். ஆனால், ஊரின் பெயரை மட்டும்
மாற்றிவிட்டால், பசுமை வந்துவிடுமா? அதனால்தான், முதலில் பசுமையை உருவாக்கும்
வேலைகளைக் கையில் எடுத்துள்ளோம். நாளைக்கு ஊரே பசுமையாக மாறி நிற்கும்போது, 'பசுமைநல்லூர்' என்று
ஊர், உலகமே அழைக்க ஆரம்பித்துவிடும்!'' என்று நம்பிக்கையோடு சொன்ன அந்த இளைஞர்களுக்கு
வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்றோம
சீக்கிரமே இது, ஜீரோ பட்ஜெட் கிராமம்!
சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில், நல்லூர்பாளையம் விவசாயிகளின் சார்பாக கண்டியப்பன் என்கிற விவசாயி கலந்து கொண்டார். பயிற்சி முடித்து ஊருக்குத் திரும்பியவர், மரத்தடியில் மாநாடு கூட்டி, தான் கற்றுக் கொண்ட விஷயங்களை சக விவசாயிகளுக்கும் கற்றுத் தர ஆரம்பித்திருக்கிறார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய கண்டியப்பன், ''இளந்தாரிங்க எல்லாம் அவங்க பங்குக்கு மரம் நடுறது, சுற்றுச்சூழலைக் காப்பாத்துறது, விழிப்பு உணர்வு படங்கள திரையிடுறதுனு தூள் கிளப்பிட்டிருக்காங்க. அவுங்களுக்கு இணையா நாமளும் ஏதாச்சும் செய்யணும்னு தோணுச்சு. என்ன மாதிரி நடுத்தர விவசாயிங்க ஒண்ணு கூடி எங்க ஊரை 'ஜீரோ பட்ஜெட்’ பூமியா மாத்திக் காட்டணும்னு முடிவு செஞ்சுட்டோம். அதுக்காகத்தான் ஊரு சார்புல ஜீரோ பட்ஜெட் வகுப்பில கலந்துகிட்டேன். அங்க சொல்லிக் கொடுத்த விஷயங்களை பக்காவா குறிப்பு எடுத்துட்டு வந்து, ஊர் விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்.
ஒரு வருஷத்துக்குள்ள 10 பேரையாவது ஜீரோ பட்ஜெட்டுக்கு மாத்திடுவேன். அவங்க மூலமா அடுத்தடுத்து பயிற்சி கொடுத்து... ஊரையே ஜீரோ பட்ஜெட் ஊரா மாத்திடுவோம். எங்களுக்கு இந்த மாதிரி விஷயங்களுக்கு அடிப்படையா இருக்கற 'பசுமை விகடன்’ பத்திரிகைக்கு நாங்க என்னிக்கும் நன்றி கடன்பட்டிருக்கோம்'' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
ஜி. . பழனிச்சாமி பசுமைவிகடன்
|