Welcome to Pasumai Nallur

தேவையா சர்க்கரை ? சர்க்கரை கசக்கிற சர்க்கரை !!!

நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை இருக்காது. இன்சுலின் சுர ப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை ஏற்படும். விளைவு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் (டையாபடீஸ்) வருகிறது.

சர்க்கரை நோய் அதிகம் உள்ள உலகின் முதல் 5 நாடுகள். இந்தியா: 4 .09 கோடி, சீனா: 3 .69 கோடி, அமெரிக்கா: 1 .92 கோடி ரஷ்யா::.0.96 கோடி, ஜெர்மனி:0.74 கோடி. இதில் முன்னிலையில் நிற்பது நாம தாங்க..!

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகமும் இந்தியா டயாபெடிக்ஸ் அமைப்பும் இணைந்து நடத்திய மாதிரி ஆய்வின்படி இந்தியாவில் நிகழாண்டில் 6.2 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். அடுத்து சர்க்கரை நோய்க்கு இலக்காகக்கூடிய எல்லைக்கோட்டில் நிற்போர் 7.7 கோடி பேர்.

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் இவற்றின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது உண்மை. இதற்கு அடிப்படைக் காரணம் இந்தியர்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. உணவுப்பழக்கம் முன்புபோல இல்லை. மனஅழுத்தமும், மனச்சோர்வும் நடுத்தர மக்களிடம் குடிகொண்டுவிட்ட நோய்களாகவே மாறிவிட்டன.

  • உலக நல நிறுவன கணிப்புப்படி, வளரும் நாடுகள்தான், 21 ம் நூற்றாண்டின் இந்த நோய்க்கான சுமையைத் தாங்கப் போகிறது.
  • குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 70% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட உள்ளனர் 21 ம் நூற்றாண்டில்
  •  40 -59 வயதில் உள்ளவர்களைத்தான் சர்க்கரை நோய் படை எடுக்கிறது.
  • இந்த எண்ணிக்கை 2030 ல், 60 -79 வயதுக்கு ஓடி விடுகிறது. அவர்களில் 1 .98 கோடிப் பேர் பாதிப்புக்கு உள்ளாகி விடுவார்கள்.
  • உலகம் முழுவதுக்கும், சீக்கிரம் நோய்வாய்ப்பட்டு, விரைவில் உயிரிழப்பு ஏற்படும் ஒரு வியாதிகளில் ஒன்றாக சர்க்கரை நோய் இருக்கப்போகிறது.


ஆரோக்கியமான ஒரு நபரில் உட்கொள்ளும் உணவு எப்படி சக்தியாக மாறுகிறது மற்றும்சர்க்கரை நோய் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதனை கீழே விவரிக்கப்பட்டுள்ளது
உட்கொள்ளும் உணவு குளுக்கோஸ் -ஆக மாறுகிறது

நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள். இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
குளுகோஸ் செல்களுக்குள் செல்லுதல்

கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் சந்தித்து, செல்களானது குளுகோஸ்- தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது.
செல்கள் குளுக்கோஸ்- சக்தியாக மாற்றுகிறது

குளுக்கோஸ்- செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.
சர்க்கரை நோய் இருக்கும் போது ஏற்படும் மாற்றங்களாவன

குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது.

உணவு குளுக்கோஸ்-ஆக மாறுகிறது - வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை
ஏனெனில்

1.         இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருக்கலாம்.
2.         இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்- உட்கொள்ள முடியாத நிலை
3.         எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.

செல்களினால் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாது - எல்லா குளுக்கோஸ் துகள்களும் இரத்தத்திலேயே தங்கியிருக்கும். இதனை ஹைப்பர்கிளைசீமியா (இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருப்பது) என்பர். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை.
சர்க்கரைநோய் உள்ளவர்கள் பலவித்தியாசமான அறிகுறிகளை உணரலாம்.

சர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி?:

துரதிஷ்டம் என்னவெனில், மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. வேறு ஏதோ பிரச்னைக்காக டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக, ரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வருகிறது. சாப்பிடுவதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 60 முதல் 110 மி.கி., ஆக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின், சர்க்கரை அளவு 80 முதல் 140க்குள் இருக்க வேண்டும். இதை விட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படு கிறது. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி.கி., வரை இருந்தால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். பாரம்பரியத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மாறுபட்ட உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.

இரண்டு வகை : சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். சிறு வயதில் வருவது இதுஜுவனையில் டயாபடிக் என அழைக்கப்படுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். வைரஸ் கிருமியால், கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலின் முழுமையாக சுரக்காமல் போய்விடும். அல்லது இன்சுலினுக்கு எதிரான ஆன்டிபாடீஸ், உடலில் உருவாகி இன்சுலின் சுரப்பு அடியோடு நின்றுவிடும். இது 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளையே பாதிக்கிறது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்திருக்க வேண்டும். முதல் வகை சர்க்கரை நோயாளிகள், 5 முதல் 7 சதவீதம் பேர் உள்ளனர். இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் வருவது. குழந்தை பருவத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்கும். ஆனால், 35, 40 வயதை தாண்டும் நிலையில், இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வரும். இப்போது 30 வயதிலேயே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளை சாதாரணமாக பார்க்க முடிகிறது. ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் உறுதி செய்யப்பட்டுவிட்டால், டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப, மாத்திரையோ அல்லது இன்சுலின் ஊசியோ தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு சர்க்கரை நோயாளி எடுக்கும் மாத்திரைகளை நாம் எடுக்கக் கூடாது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொறுத்து எந்த மாத்திரை, எவ்வளவு அளவு என்பது தீர்மானிக்கப்படுவதால் டாக்டரின் பரிந்துரைபடியே மாத்திரை எடுக்க வேண்டும்

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

1.         அடிக்கடி சிறுநீர் கழித்தல் (இரவ நேரத்திலும்)
2.         தோலில் அறிப்பு ஏற்படுதல்.
3.         பார்வை மங்கலடைதல்.
4.         சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்.
5.         பாதம் மரத்துப்போதல்
6.         அதிகமான தாகம்.
7.         காயங்கள் மெதுவாக ஆறும் தன்மை.
8.         எப்பொழுதும் பசியோடு இருத்தல்.
9.         எடைகுறைதல்.
10.       தோல் வியாதிகள் ஏற்படுதல்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?

  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்திறுத்தல் விஷமாகும்.
  • அப்படி நீண்ட நாட்களாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்கு பின் இரத்தக்குழாய்கள், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளில் சிதைவு / பாதிப்பகளை ஏற்படுத்தி பல சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தும். கண், நரம்புகளில் நிரந்தர கோளாறுகளை ஏற்படுத்தும்.
  • நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதம் மற்றும் பிற உடல் உறுப்புகளில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். இரத்தக்குழாய்களில் நோய் ஏற்பட்டு இதயக்கோளாறு, ஸ்ட்ரோக் மற்றும் இரத்தச்சுழற்சியில் பிரச்சினைகள் போன்றவை ஏற்பட வைக்கிறது.
  • கண்களில் ஏற்படும் கோளாறுகளான ரெடினோபதி (கண்களில் உள்ள இரத்தக் குழாய்கள் பாதித்தல்), க்ளுக்கோமா (கண்களுக்குள் இருக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகரித்தல்) மற்றும் கேட்டராக்ட் (கண்களின் கருவிழிப்படலத்தில் வெள்ளை நிற படலம் தோன்றி பார்வையை இழக்கச்செய்தல்) போன்றவை ஏற்படும்.
  • சிறுநீரகங்கள் இரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாதபடி சிறுநீரகநோய் ஏற்படும்.
  • ஹைப்பர்டென்ஷன் எனும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் சரியாக இரத்தத்தினை இறைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.


சர்க்கரை நோயினைக் கையாளுதல்

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தனிப்பட்ட நபர் சுத்தம் சுகாதாரம் மற்றும் இன்சுலினை ஊசியாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ (மருத்துவரின் அறிவுரைப்படி) எடுத்துக் கொள்வது சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுத்து நிறுத்தும் சில எளிய வழிமுறைகள் ஆகும்.

உடற்பயிற்சி - உடற்பயிற்சி இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது மற்றும் உடலில் உள்ள செல்கள் குளுக்கோஸ்-யை உபயோகிப்பதனை அதிகப்படுத்துகிறது. 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யும் போது 135 கலோரிகள் சக்தியானது பயன்படுத்தப்படுகிறது. அதுவே 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது 200 கலோரிகள் சக்தியினை எரித்து பயன்படுத்தப்படுகிறது

சர்க்கரை நோயின்போது தோலினை பராமரிக்கும் முறை

சர்க்கரை நோய் கண்ட நபர் தோலினை பராமரிப்பது அவசியம். இரத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் போது தோலில் அதிகளவு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சான்களின் பெருக்கம் அதிகரிக்கிறது. தோல் பகுதிக்கு செல்லும் நோய் எதிர்க்கும் செல்களின் அளவும் குறைந்து காணப்படுவதால், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாவை தடுத்து நிறுத்த முடிவதில்லை. அதிகளவு குளுக்கோஸ் இருக்கும் போது உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, தோல் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.

உடலை தவறாமல் ஒழுங்காக சோதித்து, கீழ்க்காண்பவை இருப்பின் மருத்துவரிடம் அறிவிக்க வேண்டும்.

  • தோலின் வண்ணம், தன்மை மற்றும் தடிமனில் ஏற்படும் மாற்றங்கள்.
  • தோலில் ஏற்படும் கொப்புளங்கள், கட்டிகள் போன்றவை.
  • பாக்டீரியா தொற்றுவின் ஆரம்ப நிலைகளான, தோலின் நிறம் சிவத்தல், வீங்குதல், கொப்புளக்கட்டிகள், தோலின் வெப்பம் அதிகரித்தல்
  • ஆறாத காயங்கள்


சருமத்தைப் பராமரிக்கும் முறைகள்

  •  தவறாமல் குளிப்பது மற்றும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது
  • வெதுவெதுப்பான நீரில் குளிப்பது. அதிக சூடுள்ள நீரில் குளிப்பதை தவிர்க்கவும்
  • குளித்த பின் உடல் பாகங்களை, குறிப்பாக இடுக்குகள் மற்றும் மடிப்புகளை நன்கு துடைத்தல்.
  • வறண்ட சருமத்தை சொறிவதைத் தவிர்க்கவும். ஏனெனில், வறண்ட சருமத்தை சொறியும் போது ஏற்படும் காயத்தின் மூலம், பாக்டீரியாக்கள் நுழைந்து நோயினை ஏற்படுத்தும்
  • சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்


காயங்களை பராமரித்தல்
  • சர்க்கரை நோய் கண்ட நபர்கள் உடலில் ஏற்படும் சிறு காயங்களையும் சரியாக பராமரிப்பது அவசியம்.
  • சுத்தமான தண்ணீர் மற்றும் சோப் கொண்டு அடிப்பட்டவுடன் காயங்களைக் கழுவவும்
  • ஆல்காஹால்/ஐயோடின் கொண்ட மருந்துகளை காயத்தின் மேல் பூச வேண்டாம். இத்தகைய மருந்துகள் எரிச்சலை உண்டாக்கும். மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகளைப் பயன்படுத்தவும்
  • சுத்தமான பான்டேஜ் கொண்டு காயத்தை மூடி வைக்கவும்


பாதங்களைப் பராமரித்தல்

சர்க்கரை நோய் காணப்பட்டால், நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதத்தில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களைப் பராமரிக்க சில வழிமுறைகள்
  • புண், வெட்டு காயங்கள், தடித்திருத்தல், கொப்புளங்கள், கீறல்கள் போன்றவை உள்ளனவா என்று பாதங்களை அவ்வப்போது பரிசோதித்து பாருங்கள்.
  • கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்
  •  நகங்களை அவ்வப்போது வெட்டவும்
  • முடிந்த வரை காலணிகளைப் பயன்படுத்தி, பாதங்களை பாதுகாக்கவும்


பல் துலக்குதல் 

  • மிருதுவான இழைகளைக் கொண்ட ப்ரஷ்களைப் பயன்படுத்தவும்.
  • ஒரு நாளுக்கு, இரண்டு முறை பல் துலக்கவும்.
  • பல் துலக்கும் போது, ப்ரஷ்-ன் இழைகளை, பல் மற்றும் ஈறுகளின் மத்தியில் வைத்து, லேசான அசைவினால் சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதின் மூலம், இவ்விடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.
  • நாக்கு, கன்னத்தின் உட்புறம் மற்றும் பற்களின் உணவு அறைக்கும் பகுதிகளை லேசான அசைவினால் சுத்தம் செய்யவும்.
  • பல் துலக்க பயன்படுத்தப்படும் ப்ரஷ்-ன் இழை நுனியில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன. சர்க்கரை நோயாளிகள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ப்ரஷ்-யை மாற்ற வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்னர் பற்களில் படியும் அழுக்கினை சுத்தம் செய்வது (பல் இடுக்குகளில்) பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


கீழ்க்காண்பவற்றை கண்டறிந்தால் பல்மருத்துவரை அணுகவும்.

  • சாப்பிடும்போது அல்லது பல்துலக்கும் போது பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வந்தால்.
  • பல் ஈறுகள் சிவப்பாக மாறினால், வீக்கம் கண்டால், அல்லது மிருதுவாக காணப்பட்டால்.
  • பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே அதிக இடைவெளி ஏற்படும் போது .
  • பல் ஈறுகளை தொடும்போது பல் ஈறுகளிலிருந்தும் பற்சந்துகளிலிருந்தும் சீழ் வெளிப்பட்டால்.
  • பல் அமைப்பில் மாற்றம் எற்பட்டால்.
  • துர்நாற்றம் தொடர்ந்து இருந்தால்.


கண்களைப் பராமரிப்பது

சர்க்கரை நோய் கண்ட நபருக்கு கேட்டராக்ட் மற்றும் குளுக்கோமா ஏற்படும் வாய்ப்பு மாற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் உண்டு. நீண்டகாலமாக அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருந்தால், கண்களில் உள்ள சிறு இரத்தக்குழாய்களில் பாதிப்பினை ஏற்படுத்தி, ரெடினோபதி என்னும் நோயினை ஏற்படுத்தலாம். உண்மையில், இந்த ரெடினோபதிசர்க்கரை நோயாளிகளில் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரைநோய் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் ஒவ்வொரு ஆண்டும் கண்களை முழுமையாக பரிசோதிப்பது அவசியம். கீழ்க்காண்பவைகளை கண்டறிந்தால் கண் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

  • புள்ளிகள், அலசலான பார்வை, சிலந்தி வலை போன்று பார்வை சிதைவு, பார்வையின் போது கரும்புள்ளிகள், கண் வலித்தல் மற்றும் கண்கள் தொடர்ந்து சிவந்திருத்தல் போன்ற கண் பார்வை கோளாறுகள்.
  • நன்கு அறிந்த பொருட்களை சரியாக பார்க்க முடியாத நிலை, சாலை சிக்னலை சரியாக பார்க்க முடியாத நிலை மற்றும் படிக்க முடியாமல் பிரச்சினை போன்றவை.


உடற் பயிற்சி முறைகள்

தினமும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவும் காலை, மாலை இருவேளையும், குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது நடக்க வேண்டும். இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், சுமார் அரைமணி நேரம் முதல் முக்கால் மணி நேரமாவது நடக்க வேண்டும். ஓடுதல் பயிற்சியைத் (ஜாகிங்) தவிர்த்தல் வேண்டும். யோகா செய்வது, மற்றும் பிராணாயாமம் செய்வது மிகவும் நல்லது. பொதுவாக, உடலில் உள்ள அதிகக் கலோரி மற்றும் சர்க்கரை எரிசக்தியாக மாறி வியர்வையாக வெளியேற வேண்டும். உடற்பயிற்சியின் நோக்கமே அது தான்.

உணவுக் கட்டுப்பாட்டு முறைகள்

ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களைச் சாப்பிடலாம். ஏனெனில், இவற்றில் நார்ச்சத்து அதிகம். மேலும், ஜீரணமாகி உடலில் உடனடியாகச் சர்க்கரையாக மாறி விடுவதில்லை. வாழைப்பழம் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மட்டுமே சாப்பிடவேண்டும். அன்னாசி, திராட்சை, சப்போட்டா, மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றைக் கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது.

காய்கறிகளில் கிழங்கு வகைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். நார்ச் சத்துள்ள வாழைத்தண்டு, அவரை, புடலங்காய், கொத்தவரை போன்றவற்றையும் மற்றும் சௌசௌ, பாகற்காய், வெங்காயம், பூண்டு, கீரை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கடலை வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. சான்றாக, மொச்சைக்கடலை, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், தேங்காயை எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது.

கேழ்வரகுக் கஞ்சி, கூழ் போன்றவற்றைச் சாப்பிடுவதை விட, கோதுமைக் கஞ்சி சிறந்தது. ஆனால், நீட்டமாக உள்ள சம்பாக் கோதுமையையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அதில் மட்டுமே மற்ற கோதுமை வகைகளை விட சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது.

நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்

சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்துதல் என்பது எளிதானது அல்ல. மாறாக, சர்க்கரையின் அளவை இன்சுலின் போன்றவற்றின் மூலமும், மற்றும் சில வழிமுறைகள் மூலமும் கட்டுக்குள் வைக்கலாம். குறைக்கலாம். அதற்கான வழிமுறைகள்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கான உணவுமுறை
இது சர்க்கரை நோயாளியின் சத்து தேவையை சந்திக்கக்கூடிய மற்றும் பிறர் உண்ணக்கூடிய சாதாரண உணவு. அதில் மாவுச்சத்துப் பொருட்களின் அளவு கொஞ்சம் குறைந்தும் மற்ற உணவுப் பொருட்கள் போதுமான அளவு இருக்கும்.

சர்க்கரை நோய் கண்ட அனைவரும் கீழ்க்காணும் உணவுப் பொருட்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

1.         வேர்கள் மற்றும் கிழங்கு வகைகள்.
2.         இனிப்பு வகைகள்.
3.         எண்ணையில் வறுத்த பொருட்கள்.
4.         காய்ந்து உலர்த்திய பழங்கள் மற்றும் கொட்டைகள்.
5.         சர்க்கரை.
6.         வாழை, சப்போட்டா, சீதா போன்ற பழவகைகள்.

சர்க்கரைநோய் மாத்திரகளை எப்போது சாப்பிட வேண்டும்? உணவுக்கு முன்பா? பின்பா? சில டாக்டர்கள் உணவுக்கு முன்பாகச் சாப்பிடச் சொல்கிறார்கள். வேறு சில டாக்டர்கள் உணவுக்குப் பின் சாப்பிடச் சொல்கிறார்கள். யார் சொல்வது சரி?

உங்கள் சந்தேகம் முற்றிலும் சரி. இதைப் படிக்கின்ற வாசகரும் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் அவருக்கும் இந்தச் சந்தேகம் வந்திருக்கும். வழக்கமாக சர்க்கரைநோய்க்குத் தரப்படும் மாத்திரைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மையில் பணிபுரிந்து சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்கின்றன.
சில மாத்திரைகள் கணையத்திலுள்ள பீட்டா செல்களைத் தூண்டி, இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்து, ரத்தத்திலுள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். சில மாத்திரகள் உடல்தசைகளில் காணப்படும் இன்சுலின் எதிர்ப்புநிலை (Insulin Resistance ) யைச் சரிசெய்து நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இன்னும் சில மாத்திரகள் சிறுகுடலில் உணவு செரிமானமாவதைத் தாமதப்படுத்தும். அதன்மூலம் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் உடனே அதிகரித்து விடாமல் பார்த்துக்கொள்ளும்.

வேறு சில கல்லீரலிலிருந்து சர்க்கரை வெளியாகி ரத்தத்தில் கலப்பதைத் தாமதப்படுத்தும். ஆக, நீங்கள் சாப்பிடும் மாத்திரையைப் பொறுத்து அதை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை நாங்கள் கூறுகிறோம்.

பொதுவாக, கணையத்தைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்கின்ற கிளபென்கிளமட், கிளமிபிரட், கிளகிளசட், கிளபிசட் போன்றவற்றை உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டுவிட வேண்டும். காரணம், இவை ரத்தத்தில் கலந்து கணையத்தை அடைந்து இன்சுலினைச் சுரக்கச் செய்ய, குறைந்தது அரைமணி நேரம் ஆகும். மாத்திரை சாப்பிட்டு அரைமணி நேரம் ஆனபிறகு உணவு சாப்பிட்டால் உணவிலுள்ள சர்க்கரை, ரத்தத்தில் கலப்பதற்கும் இன்சுலின் சுரப்பதற்கும் சரியாக இருக்கும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கப்படும். இதன் விளைவாக சர்க்கரைநோய் கட்டுப்படும். இதேபோல் உணவு செரிமானமடைவதைத் தாமதப்படுத்கின்ற அகர்போஸ் மாத்திரைகள் மற்றும் மெக்ளிடினட் மாத்திரைகளயும் உணவுக்கு முன்பு சாப்பிட வேண்டும். இன்சுலின் எதிர்ப்புநிலையைச் சரிசெய்யும் மெட்பார்மின், பயோகிளிட்டசோன், ரோசிகிளிட்டசோன் போன்றவற்றை உணவுக்குப் பின்பு சாப்பிடலாம்

பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் தரப்படுகிறதே... வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டியது அவசியமா?
இயற்கை உணவுகளான பால், பழம், காய்கறிகளில் நமக்குத் தேவையான அளவுக்கு வைட்டமின்கள் உள்ளன. இவற்றைத் தினமும் சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் தேவையில்லை. வறுமை காரணமாக இந்த உணவுகளச் சாப்பிட இயலாதவர்களும் வயிற்றில் அஜீரணக் கோளாறு உள்ளவர்களும் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடவேண்டியது அவசியம்.

சில சர்க்கரை நோய் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது அவற்றின் பக்கவிளவாக, வைட்டமின் பி12 அளவு ரத்தத்தில் குறைவதுண்டு. அப்போது அந்த வைட்டமின் குறையை ஈடுகட்ட வைட்டமின் பி12 கலந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். பொவாகவே நமக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்கள் உடலில் சேரும் அளவு குறையும். வயிற்றில் செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கும் இதே பிரச்சினை ஏற்படும்.

சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இல்லாத நிலைமையில் இந்த வைட்டமின் குறைபாடு நரம்புகளை பாதித்து பாதங்களில் எரிச்சல், மதமதப்பு, தொடுவுணர்வின்மை போன்ற தொல்லைகளைத் தரும். இவற்றைத் தவிர்க்கவும் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டியது அவசியம்.

இன்சுலின் ஊசி போடத் தொடங்கினால் ஆயுள் முழுவதும் அதைப் போட வேண்டிய வரும் என்கிறார்களே. இது உண்மையா?

இது முழு உண்மையில்லை. அறுவைச் சிகிச்சை, மாரடைப்பு, நோய்த்தொற்று, பெண்கள் கர்ப்பம் தரித்தல் போன்ற சில அவசர நேரங்களில் சர்க்கரைநோய் மாத்திரகளைவிட, இன்சுலின் ஊசிதான் உடனடி பலனத் தரும். அந்த அவசர நிலமை சரியானதும் இன்சுலின் ஊசியை நிறுத்திவிட்டு மாத்திரைக்கு மாறிக்கொள்ளலாம்.

சர்க்கரை நோயில் முதல்வகை சர்க்கரை நோயாளிகள் என்று ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் உடலில் இன்சுலின் சிறிதளவும் சுரக்காது. இவர்கள் இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment